இந்தோனேசியாவில் உள்ள அனாக் கிரகடாவ் எரிமலை சனிக்கிழமை (செப். 6) திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் வானில் பெரும் சாம்பல் மேகங்கள் உருவாகி, விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாம்பல் பரவல் காரணமாக ஜகார்த்தாவைச் சேர்ந்த விமான நிலையங்கள் உட்பட மொத்தம் 6 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. சுகர்னோ–ஹட்டா சர்வதேச விமான நிலையத்திலும் சில நேரம் விமான இயக்கம் நிறுத்தப்பட்டு, சுமார் 170 சேவைகள் உடனடியாக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ரத்தான சேவைகள் அதிகரித்ததால் விமான நிலையங்களில் பயணிகள் இடையே குழப்பம் ஏற்பட்டது. மொத்தமாக 58 சர்வதேச சேவைகள் உட்பட 301 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
விமான போக்குவரத்து அமைச்சகத்தின் தகவலின்படி, சுமத்ரா பகுதிகளில் சுமார் 15,000 மீட்டர் உயரத்திலும், ஜாவா பகுதிகளில் சுமார் 6,000 மீட்டர் உயரத்திலும் சாம்பல் புகை சூழ்ந்ததால் 200க்கும் மேற்பட்ட விமான சேவைகள் கூட முடங்கியுள்ளன.





