அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவர், மஹாராஷ்டிராவின் மும்பையில் நடைபெற்ற இந்தியா–ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த உயர்மட்ட நிகழ்ச்சியில் பேசினார்.

அப்போது அவர் அமெரிக்க அதிபர் டிரம்பை பெயரிட்டு குறிப்பிடாமல், அமெரிக்காவின் வரி விதிப்பு நடைமுறையை சுட்டிக்காட்டி விமர்சித்தார். ஒருநாள் வரி விதித்து, சில நாட்களில் அதை ரத்து செய்து, பின்னர் மீண்டும் அமல்படுத்தும் போக்கு இருப்பதாக அவர் கூறினார்.

உலகளவில் வர்த்தக தடைகள், சந்தை முடக்கங்கள் மற்றும் கூடுதல் வரி விதிப்புகளுக்கு எதிராக குரல்கள் எழத் தொடங்கியுள்ளதாகவும், தன்னிச்சையாக எடுக்கப்படும் இத்தகைய முடிவுகள் வர்த்தகத்தை முடக்கக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சில நாடுகள் திட்டமிட்டு கட்டமைப்புக்குள் சந்தைகளை சிதைக்கும் வேறுபட்ட அணுகுமுறையை கையாளுகின்றன என கூறிய அவர், சீனா போன்ற நாடுகள் பிற நாடுகளை தங்களின் சார்பில் வைத்திருக்க முயல்கின்றன என்றார்.

தற்போதைய சூழலில் திறந்த சந்தைகளும் வலுவான பொருளாதார கூட்டாண்மைகளும் மிகவும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.