புதுடில்லி: பார்லிமென்டின் பல நிலைக்குழுக்களில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் உறுப்பினர்களாக இருந்து, நாட்டின் பல மாநிலங்களுக்கு சென்று கள ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். அந்த ஆய்வுகளில் சேகரிக்கும் தகவல்கள், கோரிக்கைகள் மற்றும் குறைகளை பார்லிமென்ட் செயலக அதிகாரிகள் உதவியுடன் தொகுத்து, அறிக்கையாக பார்லிமென்டில் தாக்கல் செய்வது வழக்கம்.
இந்த நிலையில், நிலைக்குழு தலைவர்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது. மாநிலங்களுக்கு செல்லும் போது சம்பந்தப்பட்ட முதல்வர்களை சந்தித்து மாநில வளர்ச்சி, தேவைகள் உள்ளிட்ட விஷயங்களை விவாதித்தால், மாநிலத்திற்கு என்ன தேவை என்பது தெளிவாகும்; அதனை அடிப்படையாக வைத்து பார்லிமென்டில் பேச முடியும் என அவர் வலியுறுத்தியதாக தகவல்.
அதேபோல், தமிழகத்திற்கு செல்லும் நிலைக்குழு உறுப்பினர்கள் முதல்வர் விஜயை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்றும், கட்சி தொடங்கி இரண்டே ஆண்டில் ஆட்சியைப் பிடித்தவர் என்பதால் அவரிடமிருந்து பல விஷயங்களை அறியலாம் என்றும் அவர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, நிலைக்குழுக்களில் உள்ள மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் முதல்வர் விஜயை சந்திக்க ஆர்வமாக இருப்பதாகவும், சிலர் ஏற்கனவே சந்தித்துவிட்டதாகவும் செய்தி கூறுகிறது.
மேலும், விஜய் தொடர்பான காணொளிகள் வட மாநிலங்களில் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்படுவதாகவும், தமிழகத்தின் மறைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை அடுத்து தற்போது வட மாநிலங்களில் பிரபலமாக இருப்பவர் முதல்வர் விஜய் எனவும் அந்த செய்தி தெரிவிக்கிறது. இதனை முன்வைத்து த.வெ.க.வினர் அவரை அடுத்த பிரதமர் என கூறி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




