டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், இடிபாடுகளில் சுமார் 50 மாணவர்கள் சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தென்மேற்கு டெல்லியின் சத்யா நிகேதன் பகுதியில் இன்று மதியம் 1.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த பகுதி கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ள இடமாக அறியப்படுகிறது.
நேரில் பார்த்தவர் தெரிவித்த தகவலின்படி, அந்த கட்டடம் மாணவர்களுக்கான மாதாந்திர கட்டண விடுதியாக செயல்பட்டு வந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பல மாணவர்கள் உள்ளே இருந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க 12 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.





