1951 செப்டம்பர் 6 அன்று திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்ட ‘தினமலர்’ நாளிதழ் 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதை முன்னிட்டு சென்னையின் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அரங்கில் நினைவு தபால் தலை வெளியீட்டு விழா நடைபெற்றது.

வந்தே மாதரம், தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது. துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், சென்னை நகர மண்டல அஞ்சல் துறை இயக்குநர் மேஜர் மனோஜ், ‘தினமலர்’ மதுரை வெளியீட்டாளர் எல்.ராமசுப்பு, திருநெல்வேலி–நாகர்கோவில் வெளியீட்டாளர் ஜெயஸ்ரீ வைத்தியநாதன் ஆகியோர் குத்து விளக்கேற்றினர்.

‘தினமலர்’ இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து நாளிதழின் 75 ஆண்டு பயணத்தை விவரிக்கும் ஆவணப்படம் திரையிடப்பட்டது. இதையடுத்து பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே உரையாற்றினார்.

பவள விழா நினைவு தபால் தலை மற்றும் முதல் நாள் அஞ்சல் உறையை துணை ஜனாதிபதி வெளியிட்டார். ‘தினமலர்’ கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம் துணை ஜனாதிபதிக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார். மேலும், வேலூர் பதிப்பு வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி மேஜர் மனோஜுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார்.

சிறப்புரையில், ஒரு பத்திரிகையை நடத்துவது கடினம்; அதையும் நடுநிலையுடன் நடத்துவது இன்னும் கடினம் என சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார். ‘தினமலர்’ “உண்மையின் உரைகல்” எனப் பேசப்பட்டு வருவதை குறிப்பிட்ட அவர், பல்வேறு கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் அமர்ந்திருப்பது நாளிதழின் நிலைப்பாட்டை காட்டுகிறது என்றும், இந்த நினைவு தபால் தலையை வெளியிடுவதில் மகிழ்ச்சி என்றும் தெரிவித்தார்.