‘தினமலர்’ நாளிதழின் 75ம் ஆண்டு பவள விழா, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. நாளிதழ் தொடக்கம் முதல் இன்றுவரை கடந்து வந்த பயணத்தை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் சிறப்பு கண்காட்சி அமைக்கப்பட்டது.
தமிழ் இதழியல் வரலாற்றின் நீண்ட பயணத்தை பிரதிபலிக்கும் வகையில், 111 முக்கிய இதழ்களின் முதல் பக்க தலைப்பு செய்திகள் மற்றும் தலையங்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. தமிழகத்தின் அரசியல், சமூக மாற்றங்கள் எவ்வாறு செய்திகளாக பதிவானது என்பதையும் பார்வையாளர்கள் காணும் வகையில் அமைந்திருந்தது.
1951 செப்டம்பர் 6ல் டி.வி. ராமசுப்பையரால் தொடங்கப்பட்ட ‘தினமலர்’ முதல் இதழில், ‘ஜமீன்தாரி ஒழிப்பு மசோதா’ சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட செய்தி இடம்பெற்றதாக கண்காட்சி நினைவூட்டியது. கன்னியாகுமரியை தமிழகத்துடன் இணைக்கும் முயற்சியுடன் தொடர்புடைய போராட்டப் பின்னணியில், 1956 நவம்பர் 1ல் வெளியான இதழ் வரலாற்றுப் பதிவாகக் குறிப்பிடப்பட்டதுடன், கவிஞர்களின் வாழ்த்து பாடல்களும் அப்போது இடம்பெற்றதாக எடுத்துக்காட்டப்பட்டது.
அடுத்தடுத்த காலகட்டங்களில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம், தேசிய தலைவர்களின் மறைவு, நெருக்கடி நிலை, தமிழக அரசியலில் ஏற்பட்ட தலைமை மாற்றங்கள் போன்ற பல நிகழ்வுகள் தலைப்பு செய்திகளாக வந்த விதமும் காட்சியில் இடம் பெற்றது. 2004 சுனாமி, 2020 கொரோனா ஊரடங்கு போன்ற துயரங்களும், நாட்டின் முக்கிய தருணங்களும் இணைந்து காட்டப்பட்டன; இறுதியாக 2026ல் தமிழக அரசியலில் ஏற்பட்ட பெரிய திருப்புமுனை தொடர்பான செய்தியும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது.
நீண்டகால வாசகர் ஒருவர், கண்காட்சியைப் பார்க்கும்போது அந்த காலத்துக்கே சென்றது போல உணர்ந்ததாகவும், மூன்று தலைமுறைகளுக்கு நாளிதழ் பாலமாக இருந்ததை புரிந்து கொள்ள முடிந்ததாகவும் கூறினார்.




