தினமலர் நாளிதழின் 75ம் ஆண்டு பவள விழாவில் பேசிய மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, “தினமலர் உலகின் பொதுச்சொத்து; எந்தக் காலத்திலும் இந்த உண்மை மாறாது” என்று தெரிவித்தார்.
சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களும் பங்கேற்றனர். 75ம் ஆண்டை நினைவுகூரும் சிறப்பு தபால் தலையை துணை ஜனாதிபதி வெளியிட்டார்.
துவக்க உரையில், “நான் தினமலரின் ரங்கராஜ் பாண்டே” என்று கூறிய அவர், தினமலரை தனது “தாய் வீடு” என குறிப்பிட்டு, அங்கிருந்து தான் வளர்ந்து இன்று ஒரு அடையாளமாக நிற்கிறேன் என்றார். மதுரை, சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் சுமார் 16 ஆண்டுகள் பணியாற்றிய நினைவுகளையும் பகிர்ந்தார்.
அரங்கில் இருந்த தலைவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர், அவர்களின் வருகை தினமலருக்கு பெருமை என்றார். மேலும், சரியான செய்திகளை தொடர்ந்து வழங்க தினமலர் தொடர்ந்து பாடுபடும் என உறுதியளித்தார்.
தினமலர் கடந்து வந்த பாதையை நினைவுகூர்ந்த அவர், முன்பு நாளிதழ்கள் 4 அல்லது 5 பக்கங்களாக மட்டுமே வெளிவந்த காலமும், நியூஸ் பிரிண்ட் அரசாங்கக் கோட்டாவால் கட்டுப்படுத்தப்பட்ட சூழலும் இருந்ததாக கூறினார். அத்தகைய காலத்தில், திருவனந்தபுரத்தில் தினமலர் தொடங்கப்பட்டதையும், திருவிதாங்கூர் பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் எதிர்கொண்ட துன்பங்களுக்கு குரலாக அது உருவானதையும் அவர் எடுத்துரைத்தார்.





