வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை (திருத்த) மசோதா–2026ஐ ஆய்வு செய்ய, 31 உறுப்பினர்கள் கொண்ட பார்லிமென்ட் கூட்டுக்குழு (JPC) அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு பா.ஜ., லோக்சபா எம்.பி. சஞ்சய் ஜெய்ஸ்வால் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் வெளிநாட்டு நன்கொடைகளை பெறுவதும் பயன்படுத்துவதும் தொடர்பான விதிமுறைகளை முறைப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு இந்தத் திருத்த மசோதாவை கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியது. ஆனால் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் அதன் அறிமுகம் நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்த திருத்தங்களில், ஒரு அமைப்பின் எப்.சி.ஆர்.ஏ. உரிமம் புதுப்பிக்கப்படாவிட்டால் அல்லது ரத்து செய்யப்பட்டால், வெளிநாட்டு நிதி உதவியால் வாங்கப்பட்ட சொத்துக்கள் மத்திய அரசு நியமிக்கும் அதிகாரம் பெற்ற அமைப்பின் கட்டுப்பாட்டுக்கு செல்லும் வகையிலான பிரிவுகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த மாற்றங்களுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலங்களின் முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, விரிவான ஆய்வுக்காக மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்புவதாக அறிவிக்கப்பட்டது.
இப்போது அமைக்கப்பட்டுள்ள கூட்டுக்குழுவில் 21 லோக்சபா உறுப்பினர்களும் 10 ராஜ்யசபா உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர். பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து, தன் பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





