சென்னை: நாட்டின் வளர்ச்சி பயணத்தை ‘தினமலர்’ நேரில் கண்ட சாட்சியாக இருந்ததாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

‘தினமலர்’ நாளிதழின் 75வது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், 75 ஆண்டுகால சேவையை நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்தார். நாளிதழுடன் தொடர்புடைய அனைவருக்கும், வாசகர்களுக்கும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்த அவர், நினைவு தபால் தலை வெளியிடப்படுவது கொண்டாட்டத்தின் சிறப்பை மேலும் உயர்த்துவதாக குறிப்பிட்டார்.

சமூக, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம் ஊடகங்கள் விழிப்புணர்வை உருவாக்கி, மக்களின் பங்கேற்பை ஊக்குவிக்கின்றன என்றும் மோடி கூறினார். பல தசாப்தங்களாக சமூகத்திற்கு சேவை செய்த ‘தினமலர்’ நாட்டின் முன்னேற்றத்தை பார்த்ததோடு, அந்த மாற்றத்தின் ஒரு பகுதியாகவும் இருந்ததாக அவர் தெரிவித்தார்.

இந்திய மொழிகள் மற்றும் மரபுசார் அறிவுகளை பேணிப் பாதுகாப்பதிலும் பரப்புவதிலும் ஊடகங்களுக்கு பங்கு இருப்பதாக கூறிய அவர், தமிழுக்கு இந்திய பாரம்பரியத்தில் தனி இடம் இருப்பதை சுட்டிக்காட்டினார். தமிழின் இலக்கிய வளம் இளைய தலைமுறையினரிடம் சென்றடைய வேண்டும்; அதன்மூலம் அவர்கள் அதை அனுபவித்து, பாரம்பரியத்தை மேலும் செழுமைப்படுத்த பங்களிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக துாய்மை இயக்கம், டிஜிட்டல் பரிவர்த்தனைகள், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழியைத் தவிர்த்தல் போன்ற முயற்சிகள் மக்கள் இயக்கங்களாக உருவெடுத்துள்ளதை குறிப்பிட்ட மோடி, இந்த முன்னேற்றப் பயணத்தில் ஊடகங்கள் நேர்மறை மாற்றங்களுக்கு துணை நின்றதாக கூறினார். 2047க்குள் ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ உருவாக்கும் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அவர், அந்த இலக்கிற்கு ‘தினமலர்’ தொடர்ந்து ஊக்கமளிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.