மத்திய அரசின் சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், செப்டம்பர் 7 திங்கள்கிழமை புதுடில்லியில் உயர்மட்ட மறுஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் துறைவாரியான முன்னேற்றம், அமைச்சர்கள் மற்றும் துறைகளின் செயல்திறன் உள்ளிட்ட அம்சங்கள் மதிப்பாய்வு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்படலாம் என்ற பேச்சுகள் நிலவும் சூழலில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
டில்லியில் நடைபெறும் கூட்டத்தில் 15க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் மற்றும் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் தங்களது அமைச்சகங்களின் செயல்திறன் அறிக்கைகளுடன் பங்கேற்க உள்ளனர்.
குறிப்பாக கல்வி, விவசாயம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் போன்ற முக்கிய அமைச்சகங்களின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படவுள்ளது. அரசு அறிவித்த மக்கள் நலத்திட்டங்களின் தற்போதைய நிலவரம், இலக்குகள் எட்டப்பட்டுள்ளனவா என்பதும், அமைச்சர்களின் தனிப்பட்ட செயல்திறனும் பிரதமர் நேரடியாக மதிப்பாய்வு செய்ய உள்ளார்.
அரசுத் திட்டங்கள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதும், அமைச்சகங்களின் பொறுப்புணர்வை அதிகரிப்பதும் இந்த ஆய்வின் நோக்கமாக கூறப்படுகிறது. திட்டங்களை அறிவிப்பதோடு நிற்காமல், செயலாக்கம் மற்றும் தாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.





