புதுடில்லி: நகரங்கள், விவசாய நிலங்கள் மற்றும் தொழில் பகுதிகள் மேலே ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்களின் பறப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் போக்குவரத்தை கண்காணித்து நிர்வகிக்க புதிய தேசிய ட்ரோன் கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வீடியோ பதிவு, நில அளவீடு, பூச்சிக்கொல்லி தெளிப்பு போன்ற பணிகளில் ட்ரோன்கள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. வணிக டெலிவரி மற்றும் மனிதர்களை ஏற்றிச் செல்லும் ட்ரோன் முயற்சிகளும் பல இடங்களில் சோதனை நிலையில் உள்ளன. அசாம், நாகாலாந்து மலைப்பகுதிகளில் அஞ்சல் துறை, தலைமை அலுவலகத்திலிருந்து தொலைதூர மலைகிராம கிளை அலுவலகங்களுக்கு தபால்களை ட்ரோன் மூலம் கொண்டு செல்லும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளது.
குறைந்த உயரத்தில் ட்ரோன் இயக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதி, தற்போதுள்ள விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பைப் போலவே, ஆனால் 1,000 அடிக்குள் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் பறக்கும் சிறிய ட்ரோன்களின் இயக்கத்தை நிர்வகிக்கும் வகையில் புதிய தேசிய அளவிலான கண்காணிப்பு அமைப்பு வடிவமைக்கப்படுகிறது. இதற்கான தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டு முறைகள் குறித்து உலக நிறுவனங்களிடம் விமான நிலைய ஆணையம் (AAI) ஆலோசனை பெறும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
தற்போதுள்ள விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பின் மூலமே ட்ரோன்களை நிர்வகிக்க முயன்றால், விலை உயர்ந்ததும் அதிக எடையுடையதும் கூடுதல் உபகரணங்களை ட்ரோன்களில் பொருத்த வேண்டிய நிலை ஏற்படலாம்; இது இயக்கத்தை பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், பெரும்பாலும் மென்பொருள் அடிப்படையிலான தானியங்கி அமைப்பாக ட்ரோன்களுக்கென தனித்துவமான கட்டமைப்பை உருவாக்க AAI திட்டமிட்டுள்ளது; இது இயக்கத்தை கண்காணிப்பதுடன், நிகழ்நேர தகவல் பரிமாற்றம் மற்றும் ஆபத்து நேரங்களில் எச்சரிக்கை வழங்கும் வசதியையும் கொண்டிருக்கும்.
இந்த புதிய ஆளில்லா விமான போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பில் மூன்று முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது: அனுமதிக்கப்பட்ட பகுதிக்குள் மட்டுமே ட்ரோன் பறப்பதை உறுதி செய்து எல்லையை நெருங்கும்போது எச்சரிக்கை வழங்குதல்; குறிப்பிட்ட வான்வெளியில் ட்ரோன்கள் மற்றும் வழக்கமான விமானங்களின் இருப்பிடத் தகவலை அங்கீகரிக்கப்பட்டவர்கள் நிகழ்நேரத்தில் அறிதல்; மேலும் உரிய அனுமதி இல்லாத ட்ரோன் பறக்கத் தொடங்குவதைத் தடுப்பது. ட்ரோன் ஒழுங்குமுறைக்காக அரசு பயன்படுத்தி வரும் “டிஜிட்டல் ஸ்கை” தளமும் இந்த புதிய அமைப்புடன் இணைக்கப்பட உள்ளது.





