ஊழலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது; ஆதாரம் இருந்தால் மட்டுமே வழக்கு மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

மதுரையில் பேசிய அவர், யார் மீதும் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும், சும்மா பொய்யான வழக்குகள் போட வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார். ஆதாரங்கள் கிடைத்தால் சட்டப்படி நடவடிக்கை தொடரும் என்றார்.

முன்னதாக முன்னாள் அமைச்சர் நேருவுக்கு அரசு பணிக்கு ஆள் சேர்த்ததாக பணம் வாங்கியதாக கூறி அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்ததாகவும், அது ஆதாரங்களுடன் அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பல ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து “கூட்டு சதி” என இரண்டு முறை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை ஆதாரங்களை சமர்ப்பித்ததாகவும், அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கை பதிவு செய்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய நடவடிக்கை எந்த விவகாரம் தொடர்பானது என்பது தனக்குத் தெரியாது; இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையே விளக்கம் அளிக்க வேண்டும் என்றார். மின்வாரியத்தின் 45 டெண்டர்களில் முறைகேடுகள் உள்ளதாகவும், அவை எந்த காலகட்டத்தில் நடந்தன என்பதை நிரூபிக்காமல் நீதிமன்றத்தில் நிலைநாட்ட முடியாது என்றும் கூறி, மக்கள் பணம் தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தால் வழக்குகள் பதிவு செய்யப்படும் என்றார்.