புதுடில்லி: இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு தொடர்பான நிலைப்பாடு தெளிவானது; அதில் எந்தவித சமரசமும் இல்லை என மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஆப்ரிக்க கண்டத்தின் உண்மையான பரப்பளவை பிரதிபலிக்கும் புதிய உலக வரைபடத்தை பயன்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை ஐ.நா. பொதுச்சபை ஏற்றுக்கொண்ட பின்னணியில் இந்த விளக்கம் வெளியானது. அந்த தீர்மானத்திற்கு 164 நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில், அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால், இந்தியா அந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார். ஆனால் இது எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் வரைபடத்தையும் ஏற்றுக்கொள்ளவோ அங்கீகரிக்கவோ செய்வதில்லை என்றும், சர்வதேச எல்லைகள், சர்ச்சைக்குரிய பகுதிகள் அல்லது இடப்பெயர்கள் போன்ற அரசியல் வரைபடவியல் அம்சங்களை இது குறிப்பிடவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் உட்பட இந்திய இறையாண்மைக்குட்பட்ட பகுதிகள், இந்தியாவின் அதிகாரப்பூர்வ வரைபடத்தின்படியே சித்தரிக்கப்பட வேண்டும் என்றும், தவறான அல்லது திசைதிருப்பும் சித்தரிப்புகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு குறித்த இந்தியாவின் நிலைப்பாடு உறுதியானது; சமரசத்திற்கு உட்படாதது எனவும் அவர் மீண்டும் தெரிவித்தார்.





