சென்னை: ‘தினமலர்’ நாளிதழின் 75 ஆண்டு பவள விழாவை முன்னிட்டு, முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், ஊடகத்துறையில் நேர்மையும் அர்ப்பணிப்பும் கொண்டு உலகெங்கும் உள்ள தமிழ் மக்களின் நம்பிக்கையை 75 ஆண்டுகளாக தொடர்ந்து பெற்றுள்ளதாகவும், சமூக சேவையால் நல்ல பெயர் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கால மாற்றங்கள் பல இருந்தாலும் உண்மைத்தன்மை மாறாமல் உண்மைகளை உரக்கச் சொல்லி, வரலாற்றுச் சுவடுகளை பதிவு செய்து, பல தலைமுறைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் அவர் பாராட்டினார்.

சமூக அநீதிகளை களையும் வகையில் சமரசமின்றி செய்திகளை வெளியிடும் ‘தினமலர்’ பயணம் தொடர வேண்டும் என்றும் அவர் கூறினார். பவள விழாவை முன்னிட்டு துணை ஜனாதிபதி நினைவு தபால் தலையை வெளியிட்டது நாளிதழின் பெருமைக்கு மகுடம் சூட்டுவது போன்றது என குறிப்பிட்டு, நிர்வாகம், ஆசிரியர் குழு மற்றும் பணியாளர்களுக்கும் அவர் வாழ்த்துகளை தெரிவித்தார்.