மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் கடற்கரையோரத்தில், பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை அறிய இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை 3ம் கட்ட ஆழ்கடல் அகழாய்வை தொடங்கியுள்ளது.

முன்னதாக 2025 மற்றும் 2026 மார்ச் மாதங்களில் நடைபெற்ற இரண்டு கட்ட ஆய்வுகளில், கடலில் மூழ்கிய பழைய பூம்புகார் நகரத்தின் கட்டட அமைப்புகள், சுற்றுச்சுவர், சாலை போன்ற வடிவமைப்புகள் மற்றும் பானை ஓடுகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. வானகிரி பகுதியில் கோவில் அமைப்பு கண்டறியப்பட்டதுடன், 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கூறப்படும் ஒரு கப்பலும் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போதைய 3ம் கட்டத்தில், பூம்புகார் கடற்கரையிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில், 10 மீட்டர் ஆழத்தில் ஆழ்கடல் பகுதியில் அகழாய்வு தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு 20 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடல்சார் ஆராய்ச்சி ஆலோசகர் பேராசிரியர் ராஜன் தலைமையில், தொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் ஸ்கூபா டைவர்ஸ் உள்ளிட்ட 25 பேர் கொண்ட குழு, அதிநவீன டைவிங் உபகரணங்கள் மற்றும் அண்டர் வாட்டர் கேமராக்களுடன் ஒரு விசைப்படகு மற்றும் இரண்டு பைபர் படகுகளில் கடலுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டது. டைம் போர்ஸ் அமைப்பின் இயக்குனர் அரவிந்தன் வழிகாட்டுதலிலும் பணிகள் நடந்தன.

ஆய்வு நடைபெறும் இடத்தில் தமிழக தொல்லியல் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தொல்லியல் துறை இயக்குனர் ஜெயசீலன் ஆகியோர் ஸ்கூபா டைவ் முறையில் ஆழ்கடலில் இறங்கி பணிகளை நேரில் பார்வையிட்டனர். சென்னையில் இரண்டு நாட்கள் பயிற்சி பெற்ற பின்னரே தாம் இந்த ஆய்வில் கலந்து கொண்டதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும், கட்டட எச்சங்கள், பானை ஓடுகள், தெருக்கள் போன்ற அமைப்புகள் காணப்படுவதாகவும், இது சங்ககால நகரமாக இருக்கலாம் என்ற அடிப்படையில் ஆய்வுகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.