லண்டனில் நடைபெற உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதற்கு ஆர்.எஸ்.எஸ். தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள 20 சமூக அமைப்புகள், நிகழ்ச்சிக்கு அரங்கம் வழங்கக் கூடாது என லண்டன் மேயர் சாதிக் கானுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மோகன் பாகவத் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த வாரம் அமெரிக்கா மற்றும் கனடா சென்ற அவர், செப். 2 முதல் பிரிட்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

லண்டனில் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதற்கு பிரிட்டன்-இந்திய முஸ்லிம் கவுன்சில், தெற்காசிய ஒற்றுமை குழு உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து, மேயருக்கு கடிதம் அனுப்பியுள்ளன.

இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ். ஊடக பொறுப்பாளர் சுனில் அம்பேத்கர், ஜனநாயகத்தில் மாறுபட்ட கருத்துகள் இருப்பது இயல்பானது என்றும், பல்வேறு குரல்கள் எழுவது இயல்பே என்றும் கூறினார். தாங்கள் அமைதி, ஒருங்கிணைப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்காகவே இங்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் அனைவருடனும் பேச்சு நடத்த தயாராக இருப்பதாகவும், தாங்கள் யார், என்ன சிந்திக்கிறார்கள், எவ்வாறு சிந்திக்கிறார்கள், தங்களின் உலகப் பார்வை என்ன என்பதைக் வெளிப்படையாக தெரிவிக்கவே வந்துள்ளதாகவும் கூறினார். மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றும், கருத்துப் பரிமாற்றம் மற்றும் விவாதத்தை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.