சென்னை: தினமலர் நாளிதழின் பவள விழாவை முன்னிட்டு, சிருங்கேரி சங்கராச்சாரியார் ஸ்ரீவிதுசேகர பாரதி சுவாமிகள் ஆசியுரை வழங்கி, தேசியமும் ஆன்மிகமும் இணைந்த பாதையில் நாளிதழ் தொடர்ந்து பயணிப்பதை பாராட்டினார்.
அவர் ஆசியுரையில், ஞானத்தை நாடுபவர்களுக்கு பகவத் கீதையில் கூறப்பட்ட பண்புகளை நினைவூட்டினார். ஆதிசங்கரர் தமது பாஷ்யத்தில் விளக்கியபடி, பிறரை ஏமாற்றுதல், எண்ணம்-செயல் முரண்பாடு, பொய் ஆகியவற்றைத் தவிர்த்து எப்போதும் நேர்மையுடன் இருப்பதே முக்கியம் எனக் குறிப்பிட்டார்.
இந்தப் பண்புகள் மனிதர்களுக்கு மட்டுமல்ல; சமூகத்திற்கு செய்திகளைத் தெரிவிக்கும் நல்ல பத்திரிகைகளுக்கும் பொருந்த வேண்டும் என்றும் அவர் கூறினார். தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையர், இத்தகைய மதிப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து, தேசியமும் ஆன்மிகமும் கலந்த உள்ளடக்கத்துடன் நாளிதழை நடத்தினார் எனவும் ஆசியுரையில் தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக, பரம்பொருள் தொடர்பான கருத்துகளும், அன்றாட வாழ்விற்கு தேவையான நடைமுறைச் செய்திகளும், நாட்டுப்பற்றை வளர்க்கும் அம்சங்களும் நாளிதழில் இடம் பெறுகின்றன என அவர் சுட்டினார். நிறுவனர் வம்சாவளியினரும் ஊழியர்களும் இதே நோக்கத்திலிருந்து வழுவாமல் நாளிதழை தொடர்ந்து சிறப்பாக நடத்தி வருவதாகவும், இந்நாளிதழ் இன்று பவள விழாவைக் கொண்டாடுவது மகிழ்ச்சிக்குரியது என்றும் கூறினார்.
மேலும், சிருங்கேரி ஜகத்குரு மகாசுவாமிகளிடம் பக்தி சிரத்தை கொண்ட தினமலர் குழுவினர், சிருங்கேரி மடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் மகாசுவாமிகளின் விஜய யாத்திரை தொடர்பான செய்திகளையும் சிறப்பாக வெளியிட்டு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். ஸ்ரீசாரதா சந்திரமவுலீஸ்வரர் அனுக்கிரஹமும் குருநாதரின் கிருபையும் கொண்டு, தினமலர் மக்கள் சேவையில் நீண்ட காலம் மேலும் சிறப்பாக விளங்க வேண்டும்; நிர்வாகத்தினரும் ஊழியர்களும் நன்மைகள் பெற வேண்டும் என அவர் ஆசீர்வதித்தார்.





