சென்னை: தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் விற்பனைக்காக அனுப்பப்பட்ட வெங்காயம் பெரும்பாலான இடங்களில் விற்றுத் தீர்ந்ததால், கூடுதல் அளவில் வெங்காயம் வழங்குமாறு மத்திய அரசிடம் மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளது.

தமிழ்நாட்டில் வெங்காய விளைச்சல் குறைந்துள்ள நிலையில், மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து வரத்து கொண்டு வந்து தேவையை பூர்த்தி செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அங்கிருந்து வரத்து குறைந்ததால், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் வெங்காய விலை உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் கிலோ வெங்காயம் ரூ.60–70 வரை விற்பனை ஆகும் சூழலில், விலை உயர்வை கட்டுப்படுத்த ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் விற்க அரசு முடிவு செய்தது.

இதற்காக முதல் கட்டமாக மத்திய அரசிடமிருந்து 910 டன் வெங்காயத்தை தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் வாங்கியது. செப்டம்பர் 3 முதல் நகர்ப்புறங்களில் உள்ள 8,914 ரேஷன் கடைகளில் கிலோ ரூ.35 என்ற விலையில் விற்பனை தொடங்கப்பட்டது.

ஒரு கடைக்கு சராசரியாக 50 கிலோ அளவில் அனுப்பப்பட்டு, ஒரு கார்டுதாரருக்கு ஒரு கிலோ என்ற அளவில் வழங்கப்பட்டது. பெரும்பாலான கடைகளில் இருப்பு முடிந்ததால், மத்திய அரசின் கூட்டுறவு அமைப்புகளிடம் 1,000 டன் கூடுதல் வெங்காயம் கோரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய சரக்கு வந்ததும் ரேஷன் கடைகளில் விற்பனை தொடரும் எனவும் கூறினர்.