ஆப்ரிக்க கண்டத்தின் உண்மையான பரப்பளவை நெருக்கமாக காட்டும் புதிய உலக வரைபட முறையை பயன்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை ஐ.நா. பொதுச்சபை நிறைவேற்றியுள்ளது. தீர்மானத்தின் மீது நடந்த ஓட்டெடுப்பில் 164 நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில், அமெரிக்கா மட்டும் எதிர்ப்பு தெரிவித்தது.

உலகத்தை இரு பரிமாண வரைபடமாக காட்ட நீண்ட காலமாக “மெர்கேட்டர்” என்ற வரைபட முறை பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1569-ல் பெல்ஜியத்தைச் சேர்ந்த வரைபட நிபுணர் ஜெரார்டஸ் மெர்கேட்டர் உருவாக்கிய இந்த முறை, கடல் வழி வழிநடத்தலுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த முறையில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளின் நிலப்பரப்பு உண்மையான அளவை விட பெரிதாகத் தோன்றும் குறைபாடு உள்ளது. இதனால் பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா போன்ற பகுதிகள் சிறியதாகவும், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா போன்ற வடக்கு பகுதிகள் பெரிதாகவும் தெரிகின்றன.

இந்த சிக்கலை சரிசெய்யும் நோக்கில் 2018-ல் வரைபட நிபுணர்கள் “ஈகுவல் எர்த்” (Equal Earth) என்ற புதிய வரைபட முறையை உருவாக்கினர். இதில் கண்டங்களின் பரப்பளவு உண்மைக்கு நெருக்கமாக பிரதிபலிக்கும் வகையில் உலக வரைபடம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டெடுப்புக்குப் பிறகு தீர்மானத்தை ஆதரித்த பிரான்ஸ், மெர்கேட்டர் முறையை கைவிடப் போவதாக அறிவித்துள்ளது. பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பாரோ, “வரைபடத்தை மாற்றுவதால் உலகம் மாறாது; ஆனால் தவறான பிரதிநிதித்துவத்தை திருத்துவது உண்மையை நிலைநாட்டும் நடவடிக்கை” என்று கூறினார்.