லக்னோ: அடுத்தாண்டு பிப்ரவரி–மார்ச்சில் உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் மூன்றாவது முறையாக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பா.ஜ. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தேர்தல் பணிகளை முன்கூட்டியே தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், மாநில அரசுக்குள் சில அமைச்சர்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. துறை அமைச்சர்களை பொருட்படுத்தாமல், ஐஏஎஸ் அதிகாரிகள் முதல்வர் கூறுவதையே கேட்கிறார்கள் என அமைச்சர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

துணை முதல்வரும் மருத்துவத் துறை அமைச்சருமான பிரிஜேஷ் பதக், தன்னிடம் தெரிவிக்காமல் பல மருத்துவர்களை இடமாற்றம் செய்ததாக துறையின் மூத்த அதிகாரி மீது எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கண்டனக் கடிதம் எழுதியிருந்தாலும், அந்த அதிகாரி அதை கவனிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேபோல் பல அமைச்சர்களும் தங்களது துறை செயலர்கள் மற்றும் அதிகாரிகளின் நடவடிக்கைகளை எதிர்த்து கடிதங்கள் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர், துறை அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை; அவர்களை மாற்ற வேண்டும் என முதல்வருக்கு கடிதம் எழுதியதாகவும் தகவல்.

இந்த கடிதங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவியதால், அதிகாரிகளுக்கு ஆதரவா அல்லது அமைச்சர்களுக்கு ஆதரவா என்ற கேள்வியுடன் உ.பி. அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.