லண்டன் நோக்கி புறப்பட்ட விர்ஜின் அட்லாண்டிக் விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.

270 பயணிகளுடன் இன்று காலை சுமார் 8.20 மணியளவில் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கோளாறு இருப்பதை விமானி உணர்ந்து, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.

இதையடுத்து விமானம் தும்கூர் அருகே அரை மணி நேரத்திற்கும் மேலாக வட்டமடித்ததாகவும், பின்னர் பெங்களூருவுக்கு திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாகவும், பயணிகள் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் விமான நிலைய நிர்வாகம் கூறியுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.