கொல்கட்டா உள்ளிட்ட மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் நவராத்திரி விழா, துர்கா பூஜை என்ற பெயரில் மிக விமரிசையாக கொண்டாடப்படுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகின்றன. வட மாநிலங்களில் ஒன்பது நாட்களும் துர்கா தேவியை மையமாகக் கொண்ட வழிபாடே முக்கியமாக நடைபெறுகிறது.

மேற்கு வங்கத்தில் ஒவ்வொரு பகுதியிலும் தற்காலிகமாக அமைக்கப்படும் பிரமாண்ட பந்தல்கள் இந்த விழாவின் தனிச்சிறப்பாகக் கருதப்படுகின்றன. உலக அதிசயங்களின் வடிவங்கள் அல்லது நடப்பு சமூகக் கருத்துகளை மையமாகக் கொண்டு, கலைநயத்துடன் இவை வடிவமைக்கப்படுகின்றன.

பல பந்தல்களில் களிமண்ணால் செய்யப்பட்ட பெரிய துர்கா தேவி சிலை, மகிஷாசுரனை வதம் செய்யும் கோலத்தில் காட்சியளிப்பது முக்கிய ஈர்ப்பாக உள்ளது.

இதற்கிடையில், விழாவைச் சுற்றி அரசியல் நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நெருக்கமானவர் என குறிப்பிடப்படும் சுவேந்து அதிகாரி, பா.ஜ. ஆட்சி அமைந்த பின் முதன்முறையாக துர்கா பூஜையை மிகப் பெரிய அளவில் கொண்டாட முடிவு செய்துள்ளதாகவும், பிரமாண்ட பந்தல் அமைத்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவை அழைக்க ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மத்திய அமைச்சர்கள் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளுக்கு அடிக்கடி சென்று மக்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்றாற்போல் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி ஆலோசனை வழங்கியதாகவும் அந்த செய்தி கூறுகிறது.