சென்னை: சட்டசபையில் அமைச்சர் ஆதவ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) தொடர்பான ‘குதிரை பேரம்’ முயற்சிக்கு திமுகவே காரணம் என குற்றம்சாட்டினார். ஐயூஎம்எல் எம்எல்ஏக்கள் சென்னையில் ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்ட விவகாரத்தில் யார் ஏற்பாடு செய்தது என்பதை கண்டறிய விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
சபைக்கு வெளியே எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கூறிய கருத்துகளை குறிப்பிட்ட ஆதவ், ஒரு உரையின் பொருளை திரித்து தங்கள் தரப்பின் மீது பொய்யான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். தனிப்பட்ட எம்எல்ஏக்களுடன் தாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
வெற்றி கிடைத்த பிறகு காங்கிரஸ் ஆதரவு கடிதம் வழங்கியதாகவும், கேரளாவில் காங்கிரஸ் இடம்பெறும் கூட்டணியில் முஸ்லிம் லீக் இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், மதச்சார்பற்ற கொள்கையுடன் ஆட்சியமைப்பது குறித்து கேரள முஸ்லிம் லீக் தலைவர்களுடன் பேசியதாக தெரிவித்தார். அதன் பின்னர் தமிழக முஸ்லிம் லீக் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறினார்.
மேலும், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அகில இந்திய தலைவர்களுடனும் ஆலோசனை நடந்ததாகவும், காங்கிரஸ், முஸ்லிம் லீக், விசிக மற்றும் இடதுசாரிகள் ஆதரவுடன் ஜனநாயக முறையில் அரசு அமைந்ததாகவும் அவர் கூறினார்.
இரு ஐயூஎம்எல் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டதாக கூறப்படும் ஹோட்டல் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமானது என ஆதவ் தெரிவித்தார். அவர்களை யார் தங்க வைத்தார்கள் என்பதை விரைவில் விசாரித்து, அதன் பின்னணி யார் என்பது வெளியிடப்படும் என்றும் கூறி, ‘குதிரை பேரம்’ முயற்சியில் திமுகவே ஈடுபட்டதாக மீண்டும் குற்றம்சாட்டினார்.





