கொச்சியிலிருந்து அபுதாபி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், நடுவானில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவசரமாக கொச்சிக்கே திரும்பி தரையிறங்கியது.
புறப்பட்டு சுமார் 50 நிமிடங்கள் ஆன நிலையில், 36,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த போது விமானத்தின் முதல் இன்ஜினில் பிரச்னை இருப்பதை விமானிகள் கவனித்தனர். அந்த இன்ஜினின் ஆயில் அளவும் அழுத்தமும் வேகமாகக் குறைந்து ஆபத்தான நிலையை எட்டியதாக தெரிவிக்கப்பட்டது.
நிலைமையை மதிப்பீடு செய்த விமானிகள் அபுதாபி பயணத்தை ரத்து செய்து கொச்சிக்கு திரும்ப முடிவு செய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட இன்ஜினின் செயல்பாடும் நடுவானிலேயே நிறுத்தப்பட்டது.
விமானி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து அவசர தரையிறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஒரே இன்ஜினில் இயக்கப்பட்ட போயிங் 737 விமானம் கொச்சி விமான நிலையத்தில் எந்தவித ஆபத்துமின்றி பாதுகாப்பாக தரையிறங்கியது. பயணிகள் அனைவருக்கும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.





