மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டிலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை 2029க்குள் முழுமையாக அகற்ற மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார். நக்சலிசத்தை ஒழித்தது போலவே போதைப்பொருளையும் ஒழிப்போம் என்றும், 2047ல் “வளர்ந்த இந்தியா” இலக்கை நோக்கி போதைப்பொருள் இல்லாத இளைஞர் சக்தி நாட்டை வழிநடத்தும் என பிரதமர் நரேந்திர மோடி கருதுவதாகவும் அவர் கூறினார்.

கோவா தலைநகர் பணஜியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அந்தக் கூட்டத்தில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான மாநில அரசு மற்றும் மத்திய–மாநில உள்துறை அமைச்சக உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்த காலத்தில் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறைந்த அளவிலேயே இருந்ததாகவும், பெரிய நெட்வொர்க்கை கண்டறிந்து அழிப்பதற்குப் பதிலாக சிறிய குற்றவாளிகளையே அதிகமாக கைது செய்ததாகவும் அமித் ஷா குற்றம்சாட்டினார். 2014க்கு பிறகு போதைப்பொருள் விவகாரம் தேச பாதுகாப்பின் முன்னுரிமையாக மாற்றப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க 2019ல் நிர்வாக, மாநில, மாவட்ட நிலைகளில் நான்கு அடுக்கு கொண்ட தேசிய ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் பிரத்யேக போதைப்பொருள் தடுப்புப் படைகள் அமைக்கப்பட்டு, உள்ளூர் போலீசார் தேசிய உத்தியுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

“போதைப்பொருள் இல்லாத இந்தியா – 2029” இலக்கை அடைய அரசியல் உறுதிப்பாடு, ஒருங்கிணைந்த அமலாக்கம், போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுத்தல், பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அளித்தல் ஆகியவை முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். மேலும் மூன்று ஆண்டு வரைபடம் உளவுத்துறை–நடவடிக்கை அடிப்படையிலான அமலாக்கம், செயற்கை போதைப்பொருள் மீதான கட்டுப்பாடு, தேவை மற்றும் தீங்கு குறைப்பு, திறன் மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகிய நான்கு துாண்களை அடிப்படையாகக் கொண்டதாகவும் கூறினார்.