சென்னை: காவலர் நாளையொட்டி, மக்கள் காவல் துறையுடன் இணைந்து நம்பிக்கையுடனும் நல்லிணக்கத்துடனும் பயணித்து, அமைதி மற்றும் பாதுகாப்பு நிறைந்த தமிழகத்தை உருவாக்க உறுதியெடுக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டார்.
வெளியிட்ட அறிக்கையில், 1859ஆம் ஆண்டு மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் நவீனமும் அமைப்பு ரீதியுமான காவல்துறை உருவானதை நினைவுகூரும் நாளாக காவலர் நாள் கொண்டாடப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
சமூகத்தில் அமைதி நிலவவும், சட்டத்தின் ஆட்சி நிலைபெறவும் தன்னலமின்றி பணியாற்றும் காவல்துறையினருக்கு அவர் வாழ்த்துகளை தெரிவித்தார். குற்றத் தடுப்பு, சட்டம்–ஒழுங்கு பேணுதல் மட்டுமன்றி, ஆபத்தான சூழல்களிலும் பேரிடர் காலங்களிலும் மக்களின் உயிர், உடைமை மற்றும் உரிமைகளை பாதுகாப்பதில் காவல்துறையினர் காட்டும் துணிவும் தியாகமும் போற்றத்தக்கவை என்றும் அவர் கூறினார்.
காவல்துறையினரின் பணிச்சுமையை குறைத்து, நவீன தொழில்நுட்ப வசதிகளின் மூலம் பணித்திறனை மேம்படுத்தவும், காவலர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் தேவையான நலத்திட்டங்களை உறுதி செய்யவும் அரசு முன்னுரிமை அளிக்கும் என முதல்வர் தெரிவித்தார்.
மேலும், மக்களும் காவல்துறையுடன் கரம் கோர்த்து ஒத்துழைப்புடன் செயல்பட்டு, அமைதி மற்றும் பாதுகாப்பு நிறைந்த “உன்னத தமிழகத்தை” உருவாக்க இந்நாளில் உறுதியெடுக்க வேண்டும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.





