கோவை தி.மு.க.வில் நடைபெறும் அமைப்பு மறுசீரமைப்பு பணியில், கட்சி தலைமையின் உத்தரவுகளை மீறி முன்னாள் அமைச்சர் மற்றும் கோவை தெற்கு எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி செயல்படுவதாக கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

சட்டசபை தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, கிளை முதல் மாவட்டம் வரை அமைப்பு மாற்றங்களை மேற்கொள்ள தி.மு.க. பரிந்துரைத்துள்ளது. கோவையில் மாவட்ட அமைப்பு மூன்று மாவட்டங்களிலிருந்து ஐந்து மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், கள ஆய்வு செய்து பரிந்துரை அளிக்க மாவட்ட வாரியாக பார்வையாளர்களையும் தலைமை நியமித்துள்ளது.

கோவை மாவட்டத்திற்கு சேலம் முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி மற்றும் முன்னாள் எம்.பி. பார்த்திபன் ஆகியோர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று நடந்த கோவை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தை செந்தில் பாலாஜி புறக்கணித்தது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேர்தலில் வென்ற பின் தொகுதி பக்கம் வரவில்லை என்றும், கோவை மாவட்டம் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற நோக்கில் மாவட்டச் செயலர்களை அழைத்து கிளை, ஒன்றியம், நகர அமைப்புகளை தன் விருப்பப்படி பிரிக்கச் சொல்வதாகவும் கட்சியினர் கூறினர். பார்வையாளர்கள் தலைமையிடம் அறிக்கை அளிக்கும் முன்பே அவசரமாக மாற்றங்களை முன்னெடுக்க முயல்வதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

செயற்குழு கூட்டத்தில் பேசிய ரேகா பிரியதர்ஷினி, பார்வையாளர்கள் ‘சொல்லும் இடத்தில் கையெழுத்து போட்டு செல்வார்கள்’ என சிலர் பேசுவதாகத் தெரிந்ததாக கூறினார். தாங்கள் அதற்காக வரவில்லை என்றும், கட்சியினரிடம் பேசி ஆய்வு செய்து கட்சிக்கு எது நல்லதோ அதையே பரிந்துரைப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.