தெற்கு டில்லியின் சத்ய நிகேதன் பகுதியில் 6 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில் இருந்து இதுவரை 9 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுமார் 50 பேர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதால், சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. டில்லி முதல்வர் ரேகா குப்தா நேரில் சென்று மீட்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் ரேகா குப்தா, டில்லி போலீஸ் கமிஷ்னர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF) நிர்வாக இயக்குநர் ஆகியோரிடம் மீட்பு பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். கட்டடத்தில் தங்கியிருந்ததாக கூறப்படும் மாணவர்களின் நிலை குறித்தும் அவர் விசாரித்தார்.

எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிப்பதாகவும், உள்ளூர் நிர்வாகமும் NDRF குழுவினரும் தொடர்ந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அமித் ஷா குறிப்பிட்டார். காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, சம்பவ இடத்தை பார்வையிட்ட பாஜக எம்எல்ஏ அனில் சர்மா, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மாணவர்கள் அங்கு தங்கி கல்வி பயின்று வருவதாக கூறினார். எத்தனை மாணவர்கள் சிக்கியுள்ளனர் என்பது துல்லியமாக தெரியவில்லை என்றும், சிலர் இடிபாடுகளில் சிக்கியபோது தொலைபேசியில் உதவி கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.