தென்மேற்கு டில்லியின் சத்யா நிகேதன் பகுதியில் மாணவர்களுக்கான மாதாந்திர கட்டண விடுதி (PG) ஒன்று நேற்று மதியம் இடிந்து விழுந்தது. இதையடுத்து, சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இடிபாடுகளில் 50 மாணவர்கள் வரை சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், இதுவரை 6 பேர் உயிரிழந்ததாகவும், 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்றும், சிலர் உதவி கேட்டு அழைப்பு விடுத்ததாகவும் பாஜ எம்எல்ஏ அனில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கிய ஏஆர்எஸ்டி கல்லூரியில் பி.காம். முதலாமாண்டு படிக்கும் பீஹாரைச் சேர்ந்த ஆதித்யா, முகத்தில் ரத்தம் வழிந்தபடி 11 விநாடி வீடியோ ஒன்றை பதிவு செய்து நண்பர்களுக்கு அனுப்பி உதவி கேட்டார். அவர் மீது கான்கிரீட் கற்கள் விழுந்ததால் அசைய முடியாத நிலையில், செல்போன் மூலம் கைகளை மட்டும் அசைத்து வீடியோ பதிவு செய்ததாக கூறப்படுகிறது. மாணவர் அமைப்புகள் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து உடனடி மீட்பை வலியுறுத்தின.
தொடர்ந்து நடைபெற்ற மீட்புப் பணிகளின் மூலம் ஆதித்யா உயிருடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.





