இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, முதலில் வங்கதேசம் திரும்பி அங்கு நிலைமை சீரடைந்த பிறகு மீண்டும் இந்தியா வந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தனியார் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், தாம் சொந்த விருப்பத்தால் நாட்டை விட்டு வெளியேறவில்லை என்றும், பாதுகாப்பு காரணங்களாலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினரின் வற்புறுத்தலாலும் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் கூறினார்.
2024 ஆகஸ்ட் 5 அன்று ஹெலிகாப்டரில் ஏறும் தருணத்தில்தான் இந்தியாவுக்குச் செல்ல இருப்பது தெரிய வந்ததாகவும், இந்தியா வந்ததும் தேவையான பாதுகாப்பை வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டதாகவும் அவர் கூறினார். அதே நேரத்தில், தாயகத்தை விட்டு வெளியேறியது மனதளவில் மிகவும் கடினமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
வேறு எந்த நாட்டிற்கும் செல்லும் திட்டம் இல்லை என்றும், தமது மக்களுக்காக மீண்டும் வங்கதேசத்திற்கே திரும்புவேன் என்றும் அவர் கூறினார். இந்த காலகட்டத்தில் பிரதமர் மோடியை சந்திக்க முயலவில்லை என்றும், நாட்டிற்கு சென்று நிலைமை சீரான பின் அவரை சந்திக்க முயல்வேன் என்றும் தெரிவித்தார்.
மேலும், தன்னை திருப்பி அனுப்புமாறு வங்கதேச அரசு இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறிய அவர், அதற்குத் தேவையில்லை; தானே வங்கதேசம் வருவேன் என்றார். தம்மீதும் கட்சியின்மீதும் உள்ள தடைகள் நீக்கப்பட வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் கூறிய அவர், அவாமி லீக்கை யார் வழிநடத்த வேண்டும் என்பதை அரசாங்கமோ அல்லது பிஎன்பி கட்சியோ தீர்மானிக்க முடியாது என்றும், கட்சி விரும்பினால் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.





