புதுடில்லி: ஐ.நா. பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட புதிய உலக வரைபட தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளித்தது, இந்தியப் பகுதிகள் சித்தரிக்கப்படும் விதத்தில் மாற்றத்தை ஏற்றுக்கொண்டதாக பொருள் கொள்ளக் கூடாது என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 4-ம் தேதி நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம், உலக நாடுகளின் நிலப்பரப்புகளை துல்லியமாக பிரதிபலிக்க “சம பரப்பு” (equal-area) வரைபட முறைகளை பயன்படுத்த வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது. இதற்கு 164 நாடுகள் ஆதரவாக வாக்களித்த நிலையில், அமெரிக்கா மட்டும் எதிராக வாக்களித்தது.
“உலக வரைபடத்தில் திருத்தம்: சமச்சீரான வரைபட பிரதிநிதித்துவம் மற்றும் குறிப்பாக ஆப்ரிக்காவுக்கு சமமான பிரதிநிதித்துவத்தை ஊக்குவித்தல்” என்ற தலைப்பில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானம், வழக்கமாக பயன்படுத்தப்படும் மெர்கேட்டர் வரைபட முறையால் ஏற்படும் அளவுக் குலைவை குறைப்பதே நோக்கம் என கூறப்படுகிறது. அந்த முறையில் ஆப்ரிக்கா சிறியதாகவும், வட அமெரிக்கா மற்றும் க்ரீன்லாந்து போன்ற பகுதிகள் பெரிதாகவும் தோன்றும்.
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்தியா ஆதரித்தது சம பரப்பு வரைபட முறைகளை பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கைக்கே என விளக்கினார். குறிப்பிட்ட எந்த வரைபடத்தையோ, வரைபட முறையையோ அல்லது தேசிய எல்லைகள் சித்தரிக்கப்படும் விதத்தையோ இந்தியா ஆதரிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வரைபடத்தின்படியே சித்தரிக்கப்பட வேண்டும்; தவறான அல்லது குழப்பத்தை ஏற்படுத்தும் சித்தரிப்புகள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு குறித்த நிலைப்பாடு தெளிவானதும் மாற்றமற்றதும் எனவும் அவர் வலியுறுத்தினார்.





