டெஹ்ரான்: அமெரிக்கா அச்சுறுத்துவதையும் தாக்குதல் நடத்துவதையும் நிறுத்தினால் ஹார்முஸ் ஜலசந்தி திறந்து வைக்கப்படும் என ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாய் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்பான மோதல்களில் சேதமடைந்த ராணுவ கட்டமைப்புகளை மீட்டெடுக்க ஈரான் முயன்று வருவதாகவும், தன் ஆதரவு அமைப்புகளுடன் இணைந்து கூட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த செய்தி கூறுகிறது. மேற்காசியாவில் பதற்றம் அதிகரிக்கும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க ராணுவம் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த தகவலின்படி, ஈரானின் வான் பாதுகாப்புத் தளங்கள், ரேடார் அமைப்புகள், கடல்சார் தளங்கள், கடலுக்கு அடியில் கன்னி வெடிகள் வைக்கும் தளங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட ராணுவ இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், சுமார் 1.80 கோடி பேரல் கச்சா எண்ணெயுடன் சென்ற 40 வணிகக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் போது அமெரிக்கப் படைகள் பாதுகாப்பு அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியில் கட்டுப்பாடுகளை ஈரான் விரிவுபடுத்தக்கூடும் என்றும், ஜலசந்திக்கு வெளியே ஒரு குறிப்பிட்ட பகுதியை தடைசெய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கலாம் என்றும் ரெசாய் எச்சரித்துள்ளார். ஈரானின் அனுமதி இல்லாமல் அந்தத் தடை மண்டலத்துக்குள் நுழைய அல்லது கடக்க முயலும் வணிகக் கப்பல்கள் ஈரானின் பொருளாதாரத் தடைப் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் அவர் கூறியதாக தகவல் தெரிவிக்கிறது.
மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக ஹார்முஸ் ஜலசந்தியின் முழுமையான கட்டுப்பாடு ஈரானின் கைகளிலேயே உள்ளது என்றும், போக்குவரத்தை மீண்டும் திறப்பதற்கான முறையான தேவைகளை ஈரான் தயாரித்து வருவதாகவும் அவர் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் போக்குவரத்து சீரடைய வேண்டுமானால் தற்போதைய மோதல்கள் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்ததாக செய்தி கூறுகிறது.





