இஸ்ரோவில் உள்ள ஒன்பது ஊழியர் சங்கங்கள், உற்பத்தி மற்றும் செயல்பாட்டு பணிகள் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை தனியார் துறைக்கு மாற்றும் திட்டம் உள்ளதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்குமாறு இஸ்ரோ தலைவர் வி.நாராயணனுக்கு கடிதம் எழுதியுள்ளன.
இந்திய விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் நிலையில், தனியார் விண்வெளி நிறுவனங்களை ஊக்குவித்து, அனுமதித்து, கண்காணிக்கும் பணிகளை ‘இன்-ஸ்பேஸ்’ (IN-SPACe) மேற்கொண்டு வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில், இன்-ஸ்பேஸ் தலைவர் பவன் கோயங்கா, வரும் காலங்களில் இஸ்ரோ ராக்கெட்டுகளை தயாரிக்காது என்றும், ஏவுகணை மற்றும் ராக்கெட் உற்பத்தி பணிகள் தனியார் துறை அல்லது பொதுத்துறை நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியதாக சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, இஸ்ரோவை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்குள் மட்டும் கட்டுப்படுத்தி, ராக்கெட் உற்பத்தி மற்றும் ஏவுதள செயல்பாடுகளை அரசு கட்டுப்பாட்டில் இருந்து வெளியே கொண்டு செல்லும் கொள்கையை விவாதமின்றி ஏற்க முடியாது என சங்கங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரோ உருவாக்கிய தொழில்நுட்பம் தேசிய சொத்து என்பதால், தனியாருக்கு மாற்றம் செய்யப்படும் எந்த நடவடிக்கையும் வெளிப்படையாகவும் பொறுப்புடனும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.
மேலும், கொள்கை/சட்ட/நிர்வாக அடிப்படை, செயல்படுத்தும் காலக்கட்டம், தற்போதுள்ள ஊழியர்கள் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்பில் ஏற்படும் தாக்கம் குறித்து தெளிவுபடுத்துமாறு கேட்டுள்ளன. பி.எஸ்.எல்.வி., எல்.வி.எம்.3, எஸ்.எஸ்.எல்.வி. மற்றும் எதிர்கால ராக்கெட்டுகளின் வடிவமைப்பு, மேம்பாடு, தயாரிப்பு, ஒருங்கிணைப்பு, சோதனை, ஏவுதல் ஆகியவை தொடர்ந்து இஸ்ரோ கட்டுப்பாட்டிலேயே இருக்குமா என்பதையும், அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், காலியிடங்கள், புதிய ஆட்சேர்ப்பு கால அட்டவணை உள்ளிட்ட பணியாளர் நியமன நிலைப்பாடுகளையும் அறிவிக்குமாறு கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.





