சென்னை: தமிழகத்தில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் (ம.நீ.ம.) தலைவர் கமல் ஹாசன், முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், கிராம ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கான மாத ஊக்கத்தொகையை உயர்த்த வேண்டும் எனக் கேட்டுள்ளார். ஊராட்சி தலைவருக்கு ரூ.16,000, துணைத் தலைவருக்கு ரூ.10,000, வார்டு உறுப்பினருக்கு ரூ.8,000 என நிர்ணயிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கிராமங்களில் புதிய மதுக்கடைகள் திறப்பதற்கு கிராம சபை ஒப்புதல் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும், மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் மதுக்கடைகளை மூடுவதற்காக கிராம சபை நிறைவேற்றும் தீர்மானங்களுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிறப்பாக நடத்தப்படும் கிராம சபைக் கூட்டங்களை நேரலை செய்ய வேண்டும் என்றும், அரசு திட்டங்களை அறிவிக்கும் இடமாக மட்டும் இல்லாமல் குடிநீர், சுகாதாரம், சாலைகள் போன்ற அடிப்படை தேவைகளை மக்கள் நேரடியாக தீர்மானிக்கும் தளமாக கிராம சபை செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அக். 2 அன்று நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களை மேலும் வலுவானதாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற வேண்டும் எனவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.