பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் இன்று நடைபெறும் உயர்மட்டக் கூட்டத்தில், சமூக நீதி தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் மத்திய அரசின் முக்கிய நலத்திட்டங்களின் செயல்திறன் குறித்து ஆய்வு நடத்தப்பட உள்ளது.

சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கமான துறை வாரியான மதிப்பீட்டைத் தாண்டி, அமைச்சர்களின் செயல்திறன் குறித்தும் பார்வையிடப்படலாம் என கூறப்படுகிறது.

இந்த மதிப்பாய்வில் கல்வி, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல், சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, விவசாயம் உள்ளிட்ட அமைச்சகங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. திட்டங்களின் செயலாக்கம், கள நிலவரம், எட்டப்பட்ட இலக்குகள் மற்றும் சரி செய்ய வேண்டிய குறைபாடுகள் குறித்து விவாதிக்கப்படும்.

அனைவருக்கும் வங்கிக் கணக்கு, இலவச சமையல் எரிவாயு இணைப்பு, நிரந்தர வீடு, மருத்துவ காப்பீடு, விவசாயிகளுக்கான நிதியுதவி, அனைவருக்கும் குடிநீர், துாய்மை இந்தியா போன்ற திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படலாம்.

கடைக்கோடி மக்களையும் சென்றடையும் வகையில் நலத்திட்டங்களை செயல்படுத்துவது என்ற அணுகுமுறையுடன் இந்த மதிப்பாய்வு இணைந்துள்ளதாகவும், திட்டங்களை அறிவிப்பதோடு நிற்காமல் செயல்திறன் மற்றும் தாக்கத்தை தொடர்ந்து அளவிடும் நோக்கை இது வெளிப்படுத்துவதாகவும் பார்க்கப்படுகிறது.