செப்.14 அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், மும்பையில் வழக்கம்போல் பெரும் திரளான பக்தர்கள் பங்கேற்கும் வகையில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மும்பை கிங்ஸ் சர்க்கிள் பகுதியில் ‘ஜி.எஸ்.பி. சேவா மண்டல்’ அமைப்பு நடத்தும் விழா இந்த ஆண்டு 72வது ஆண்டாக நடைபெறுகிறது. இதற்காக அங்கு பிரமாண்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளதுடன், அதன் திறப்பு விழா செப்.12 அன்று நடைபெற உள்ளது.

விழாவின் அளவு மற்றும் பாதுகாப்பு தேவைகளை கருத்தில் கொண்டு, விநாயகர் சிலை மற்றும் தொடர்புடைய ஏற்பாடுகளுக்கு ரூ.703.27 கோடி மதிப்பில் காப்பீடு எடுக்கப்பட்டுள்ளதாக அமைப்பு தெரிவித்தது. பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 66 கிலோ தங்கம், 335 கிலோ வெள்ளி, நவரத்ன கற்கள் உள்ளிட்ட ஆபரணங்கள் சிலைக்கு அணிவிக்கப்பட உள்ளன.

மண்டலத்தின் செய்தித் தொடர்பாளர் அமித் பாய் கூறுகையில், இந்த காப்பீட்டில் அர்ச்சகர்கள், தன்னார்வலர்கள், பணியாளர்களுக்கான தனிநபர் விபத்து காப்பீடு, விழா பந்தல் மற்றும் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கான காப்பீடும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

செப்.14 முதல் 18 வரை ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சுமார் இரண்டு லட்சம் பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. தினமும் சுமார் 40,000 பேருக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.474 கோடி காப்பீடு எடுக்கப்பட்ட நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வால் இந்த ஆண்டு காப்பீட்டு தொகை அதிகரித்துள்ளது.