சென்னை பட்டினப்பாக்கம் போர்ஷோர் எஸ்டேட்டில் சுமார் 25.16 ஏக்கர் பரப்பளவில் தமிழக அரசின் புதிய தலைமை செயலகக் கட்டடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அனுமதிகளை தமிழக வீட்டு வசதி வாரியமும், சென்னை மாநகராட்சியும் வழங்கியுள்ளதாக அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, முதல்வர் அலுவலகம் மற்றும் தலைமை செயலகத்தை மாற்றும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. சட்டசபையில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமை செயலகம் கட்டப்படும் என்றும், தற்போது தலைமை செயலகமாக செயல்படும் புனித ஜார்ஜ் கோட்டை பாரம்பரியச் சின்னமாக பாதுகாக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்திருந்தார்.

புதிய தலைமை செயலகம் எங்கு அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், பட்டினப்பாக்கம் இடம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. வருவாய்த் துறைக்கு சொந்தமான கூடுதல் நிலங்களும் சேர்க்கப்பட்டால் மொத்த பரப்பளவு சுமார் 26.5 ஏக்கராக இருக்கும் என்றும், இதுகுறித்து விரைவில் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கட்டடம் சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில், 15 மாடிகளுடன் கட்டப்படலாம் என கூறப்படுகிறது. ஒரு சதுர அடிக்கு ரூ.22,000 என்ற கணக்கில் மொத்த மதிப்பு ரூ.2,047 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், சாந்தோம் முக்கிய சாலையை எளிதில் அணுகக்கூடிய இடமாக இது இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதிகாரிகள் கூறுகையில், போர்ஷோர் எஸ்டேட் (பட்டினப்பாக்கம்), கிண்டியில் உள்ள தேசிய ஆராய்ச்சி நிலையப் பகுதி, நந்தம்பாக்கத்தில் பின்டெக் சிட்டி அருகேயுள்ள இடம் என மூன்று இடங்கள் பரிசீலிக்கப்பட்டதாக தெரிவித்தனர். இதில் பட்டினப்பாக்கம் சிறந்ததாக கருதப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வீட்டு வசதி வாரிய நிலம் 1958-ல் கையகப்படுத்தப்பட்டதாகவும், 1963 முதல் 1998 வரை அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டு தற்போது சிதிலமடைந்ததால் அவற்றை இடிக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.