சங்ககால சோழர்களின் துறைமுக நகரமாகக் கருதப்படும் பூம்புகாரில் தமிழக தொல்லியல் துறை கடலடி அகழாய்வை தொடங்கியுள்ளது. இந்த பணியை தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.
சங்க இலக்கியங்கள் மட்டுமல்லாமல், சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட மணிமேகலை, சிலப்பதிகாரம் போன்ற நூல்களிலும் பூம்புகார் குறித்து பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டவர் குறிப்புகளிலும் இந்த நகரம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடல்கோள் (சுனாமி) காரணமாக நகரம் அழிந்ததாகக் கூறப்படுவதால், மத்திய மற்றும் மாநில தொல்லியல் துறையினர் முன்பே குறைந்த அளவில் கடலடி ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.
தொல்லியல் துறை இயக்குநர் ஜெயசீலன் கூறுகையில், இம்முறை தரை மற்றும் கடல் பகுதிகளில் அகழாய்வு செய்து சங்ககால துறைமுகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கட்டமைப்புகளின் பரப்பளவை கண்டறிய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், பழங்காலத்தில் தொலைந்த கப்பல் சிதைவுகள், கடல் மட்ட மாற்றங்கள் மற்றும் ஆறுகளின் போக்கு மாற்றங்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்ய உள்ளதாக கூறினார்.
இந்த அகழாய்வு கடற்கரையிலிருந்து சுமார் 250 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், 2 முதல் 60 மீட்டர் ஆழம் வரை நீச்சல் வீரர்களின் உதவியுடன் நடைபெறுகிறது. ஏற்கனவே இப்பகுதியில் மண்பாண்ட துண்டுகள், கடலுக்குள் மூழ்கிய குடியிருப்புகளுக்கான தடயங்கள் மற்றும் நீள்வட்ட வடிவ கட்டமைப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.





