புதுடில்லி
மஹாராஷ்டிராவில் டாக்டர்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடும் அரசியல்வாதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்; அவர்களை சுதந்திரமாக நடமாட விடக்கூடாது என மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த கருத்துகள் தானே மாவட்ட நகராட்சி மருத்துவமனையில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான விசாரணையில் முன்வைக்கப்பட்டன. கடந்த ஜூலை மாதம், கர்ப்பிணிப் பெண்ணுக்குச் சிகிச்சை தாமதமானதாகக் கூறி, சிவசேனா கவுன்சிலர் ரமேஷ் மத்ரே தலைமையிலான கும்பல் பெண் மருத்துவர் உட்பட மருத்துவமனை ஊழியர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் முதலில் ரமேஷ் மத்ரேவுக்கு ஜாமின் வழங்கியது. பின்னர் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த மும்பை உயர்நீதிமன்றம், அந்த ஜாமினுக்கு தடை விதித்து, அவர் சரணடைய உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றம் விதித்த ஜாமின் நிபந்தனைகளுக்கு எதிராக ரமேஷ் மத்ரே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு, அரசியல் பலம் மற்றும் பதவியை பயன்படுத்தி மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டது. கும்பலாக தாக்கும் போது டாக்டர்கள் எதிர்கொள்ளும் அச்சம் மற்றும் மன உளைச்சலையும் நினைத்துப் பார்க்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கடுமையாக சாடினர். இதையடுத்து ரமேஷ் மத்ரே தரப்பு மனுவை வாபஸ் பெற்றது.
இதற்கிடையே, ரமேஷ் மத்ரேவுக்கு வழங்கப்பட்ட ஜாமினை முழுமையாக ரத்து செய்ய மஹாராஷ்டிர அரசு மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி, வழக்கின் அடுத்த விசாரணையை செப்டம்பர் 28-க்கு ஒத்திவைத்தது.





