சென்னை: தமிழக அரசு புதியதாக அறிமுகப்படுத்த உள்ள ‘தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்’ செயல்படுத்தப்படுவதற்கு முன்பாகவே, இதற்கான ஒப்பந்தத்தை பெற்ற நகை நிறுவனங்கள் தங்கள் கடைகளிலிருந்து மோதிரங்களை அனுப்பத் தொடங்கியுள்ளன.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் சார்பில் ஆண்டுக்கு 4.41 லட்சம் குழந்தைகளுக்கு தலா ஒரு மோதிரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் செப்டம்பர் 15 அன்று துவங்குகிறது. திட்டத்திற்காக தயாராகும் மோதிரங்களை பாதுகாப்பாக இருப்பு வைக்க மாநிலம் முழுவதும் 107 மையங்களில் நவீன வசதிகளுடன் கூடிய பாதுகாப்புப் பெட்டகங்கள் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக பட்ஜெட்டில் ரூ. 2,560 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கூறுகையில், நான்கு கட்டங்களில் முதல் கட்டமாக 89,955 மோதிரங்களை தயாரித்து வழங்கும் பொறுப்பு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இம்மோதிரங்கள் திட்டத்திற்காகவே வடிவமைக்கப்பட்ட பைகளில், திட்டத்தின் பெயர் தெளிவாக குறிப்பிடப்பட்டு பேக் செய்யப்படுகின்றன என்றார்.
மேலும், சென்னை மற்றும் கோவை ஆகிய இடங்களில் உள்ள இரண்டு பிரத்யேக மையங்களில் பேக்கிங் செய்து அனுப்பும் பணி துவங்கியுள்ளதாகவும், தங்கத்திற்கான தொகையை அரசு சந்தை விலைப்படியே செலுத்தும் நிலையில், உற்பத்தி, ஹால்மார்க் முத்திரை, பாதுகாப்பான பேக்கிங் மற்றும் விநியோகம் ஆகியவை நிறுவனத்தின் பொறுப்பாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.





