சென்னை: ஆளும் தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) தலைமையிலான கூட்டணிக்குள் கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. காங்கிரஸைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெளிப்படையாக விமர்சனக் கருத்துகளை முன்வைத்ததால், த.வெ.க. தரப்பில் எரிச்சலும் பதிலடிகளும் வெளிப்பட்டுள்ளன.
சட்டசபையில் த.வெ.க.-க்கு தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் (சி.பி.ஐ.), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சி.பி.எம்.), விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. இதில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர மற்ற கூட்டணி கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில், த.வெ.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் முதல்வர் விஜயை “வருங்கால பிரதமர்” என குறிப்பிடத் தொடங்கியதை காங்கிரஸ் விரும்பவில்லை. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கருதும் சூழலில், த.வெ.க. ராகுலை ஏற்காவிட்டால் அமைச்சரவையில் உள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா செய்வோம் என காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்தார். இதையடுத்து மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் முதல்வர் விஜயை நேரில் சந்தித்து பேசினார்.
காங்கிரஸ்-த.வெ.க. இடையிலான சிக்கல் நீடிக்கும் நிலையில், சி.பி.ஐ. மாநில செயலர் வீரபாண்டியன் மற்றும் சி.பி.எம். மாநில செயலர் சண்முகம் சென்னையில் செய்தியாளர்களிடம், “நல்ல ஆட்சி, நல்ல திட்டங்கள் இருந்தால் ஆதரிப்போம்; இல்லையெனில் எதிர்ப்போம்; சமரசம் இல்லை” என கூறினர். மேலும், அதிகாரிகளை முதல்வரும் அமைச்சர்களும் வழிநடத்த வேண்டும்; ஆனால் இங்கு “எல்லாமே தலைகீழாக உள்ளது” எனவும் அவர்கள் விமர்சித்தனர்.
இதற்கு பதிலளித்த த.வெ.க. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், முந்தைய தி.மு.க. ஆட்சி அதிகாரிகளின் ஆட்சியாக இருந்ததாகவும், தற்போது அப்படி இல்லை என்றும் கூறினார். திண்டுக்கல் அருகே கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்தவர்களின் விபரம் சேகரித்த சம்பவம் தற்செயலாக நடந்ததாகவும், காரணமானவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஒரு சிலரின் தவறுகளை வைத்து பொதுவாக பேசக் கூடாது என்றும் அவர் கூறினார்.





