தமிழகத்தில் மாநகராட்சிகளை காலக்கெடு முடிவதற்கு முன்பே கலைத்து, அவற்றை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமிப்பது குறித்து த.வெ.க. அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தகவலின்படி, மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருந்தாலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் த.வெ.க.க்கு கவுன்சிலர்கள் இல்லாத நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க. ஆதிக்கம் தொடர்வதாக கூறப்படுகிறது. இந்த உள்ளாட்சி வலிமை சட்டசபை அரசியலிலும் தாக்கம் ஏற்படுத்துகிறது என த.வெ.க. தரப்பு நம்புகிறது.
பதவிக்காலம் மார்ச் வரை இருப்பதாக கூறப்படும் நிலையில், தி.மு.க.க்கு அரசியல் ரீதியாக ‘செக்’ வைக்கும் வகையில் மாநகராட்சிகளை மட்டும் முன்கூட்டியே கலைக்கும் திட்டம் இருப்பதாகவும், சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும் அறிவிப்பு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மாநகராட்சிகளில் தனி அதிகாரிகளை நியமித்து நிர்வாகத்தை த.வெ.க. கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அதன் பின்னர் ஆறு மாதங்களுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி வெற்றி பெறும் வியூகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. நகராட்சி துறை டெண்டர்களில் முறைகேடு புகார்கள் உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து தேர்தல் களத்தில் இறங்க த.வெ.க. தயாராகி வருவதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த முன்மொழிவு முதல்வர் விஜயின் கவனத்துக்கு மூத்த அமைச்சர்கள் கொண்டு சென்றுள்ளதாகவும், இறுதி முடிவை முதல்வரே எடுப்பார் என்றும் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.




