சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சி நடக்கிறது என்ற நினைப்பில் திமுக மீது தொடர்ச்சியாக ஆதாரமில்லாத, பொய்யான குற்றச்சாட்டுகளை முதல்வர் விஜய் சுமத்தியதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி குற்றம்சாட்டினார்.
சட்டசபையில் பேச அனுமதிக்கப்படவில்லை எனக் கூறி திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, கடந்த வியாழக்கிழமை காவல்துறை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் பேசும்போது, தவெகவின் 116 நாள் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்கெட்டுள்ளது என்பதை ஆதாரங்களுடன் விளக்கியதாக கூறினார்.
ஆனால் அதன்பிறகு முதல்வர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோதும், அவற்றுக்கு பதில் சொல்லும் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். சபாநாயகர் முதலில் வாய்ப்பு தருவதாக ஒப்புக்கொண்ட பின்னர் மறுத்ததாகவும், அதனால் முதல்வரின் பேச்சை முழுமையாக கேட்டுவிட்டு எதிர்ப்பை தெரிவிக்க வெளிநடப்பு செய்ததாகவும் கூறினார்.
மேலும், ஆளும் கட்சியினரே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகவும், சென்னையில் பட்டப்பகலில் நடந்த இரண்டு கொலைகள் குறித்து பேச அனுமதி கேட்டும் வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பேசும் தகுதி முதல்வருக்கு உள்ளதா என கேள்வி எழுப்பிய அவர், திமுக தலைவர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் யாரும் ஊழல் வழக்கில் தண்டிக்கப்படவில்லை என்றும், முதல்வர் மற்றும் பொதுப்பணித்துறை தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அதேபோல், ஆளும் கட்சியில் சில முன்னாள் அமைச்சர்கள் சேர்க்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய உதயநிதி, அரசு அமைக்க ஆதரவு கேட்க “பெட்டி பெட்டியாக பணம்” கொண்டு வந்ததாக முஸ்லிம் லீக் எம்எல்ஏ ஒருவர் கூறியதாகவும் தெரிவித்தார்.





