சென்னை: திமுக ஆட்சிக் காலத்தில் ‘கட்சி நிதி’ என்ற பெயரில் ஒப்பந்தத் தொகையின் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை பணம் வசூலிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை (ED) ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் சட்டசபையில் தெரிவித்தார். அந்த சதவீதத்தை வழங்க வேண்டும் எனக் கூறி பணம் வசூலிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஆதாரம் கேட்கப்பட்ட நிலையில், அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்களும் இதற்கான ஆதாரமாக இருப்பதாக முதல்வர் சுட்டினார். இந்த விவகாரத்துடன் தொடர்புடைய நீதிமன்ற நடவடிக்கைகளில் அரசு தலையிடவில்லை; அந்த சட்டநடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை என்றும் அவர் கூறினார்.
அமலாக்கத்துறை ஆவணத்தில் பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட துறைகளின் ஒப்பந்ததாரர்களிடமிருந்து ‘கட்சி நிதி’ என்ற பெயரில் வசூல் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக விஜய் தெரிவித்தார். அந்த வசூல் ஆளுங்கட்சியின் நலனுக்காகவும், தமிழக அரசை நடத்தும் கட்சியின் நலனுக்காகவும் செய்யப்பட்டதாகவும், நேரடி பயனாளிகளாக அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், அரசு அதிகாரிகள் ‘கட்சி நிதி’ என்ற பெயரில் லஞ்சம் வசூலித்ததாகவும், இது ஒரே துறைக்கானது அல்ல; பல துறைகள் தொடர்பாக அமலாக்கத்துறை தகவல்கள் கூறியுள்ளதாகவும் முதல்வர் கூறினார். முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தனது பதவியையும் அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளதாகவும், டாஸ்மாக் துறை அமைச்சர் மற்றும் சில அதிகாரிகள் (ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட) இந்த விவகாரத்தில் ஈடுபட்டதாகவும், சில தனிநபர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அமலாக்கத்துறை ஆவணத்தில் ‘ரத்தீஷ்’ என்ற நபர் “Central Figure, Operating as an unauthorised power broker” என குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறிய முதல்வர், அவர் யார், யாருக்கு நெருக்கமானவர், திமுக ஆட்சிக்கு வந்த பின் டிஆர்ஓ நிலை அதிகாரிகள் உள்ளிட்டோரின் பணியிட மாற்றங்களில் எவ்வாறு தலையிட்டார் என கேள்வி எழுப்பினார்.





