புதுடில்லி: குஜராத்தைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத ஆறு அரசியல் கட்சிகள், 2023-24 நிதியாண்டில் மொத்தமாக ரூ.1,700 கோடி நிதி திரட்டியுள்ளதாக ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் (ADR) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே காலகட்டத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகிய ஐந்து தேசியக் கட்சிகள் நாடு முழுவதும் தேர்தல் நிதியாக ரூ.1,480 கோடி திரட்டியதாகவும் ADR குறிப்பிட்டுள்ளது.

நிதி திரட்டலும் தேர்தல் பங்கேற்பும் இடையே பெரிய இடைவெளி இருப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அந்த நிதியாண்டில் நடந்த லோக்சபா தேர்தலில் ஐந்து தேசியக் கட்சிகள் 893 வேட்பாளர்களை களமிறக்கின. ஆனால் ரூ.1,700 கோடி திரட்டிய குஜராத் ஆறு கட்சிகள் 15 வேட்பாளர்களையே நிறுத்தின.

மேலும், இந்த ஆறு கட்சிகளில் நான்கு கட்சிகளின் முகவரிகள் ஆமதாபாத் நரோடா என்ற ஒரே பகுதியில் பதிவாகியுள்ளதாக ADR தெரிவித்துள்ளது. இதில் ‘ஆம் ஜன்மத் கட்சி’ மட்டும் ரூ.620 கோடி திரட்டியதாகவும், அது காங்கிரஸ் திரட்டிய தொகையை விட இருமடங்கு அதிகம் எனவும் அறிக்கை கூறுகிறது.

நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத சுமார் 2,800 கட்சிகளில் 73% கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் கணக்கு விவரங்களை சமர்ப்பிப்பதில்லை என்றும் ADR சுட்டிக்காட்டியுள்ளது. தேர்தலில் தீவிரமாக போட்டியிடாத கட்சிகளுக்கு கோடிக்கணக்கில் நிதி குவிவது வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான சந்தேகங்களை எழுப்புவதாகவும் அது தெரிவித்துள்ளது.