மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், தினசரி நடைமுறையை மீறி இசையமைப்பாளர் இளையராஜாவை முதல் மணி ஒலிக்கும் முன்பே மூலஸ்தானத்துக்குள் அழைத்துச் சென்றதாக கூறப்படும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்படும். பக்தர்கள் சித்தி விநாயகர் சன்னிதி அருகே காத்திருந்து, 5.00 மணிக்கு மணி ஒலித்த பிறகே மூலஸ்தானத்துக்கு சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். அதன் பின்னர் திருவனந்தல் பூஜை நடைபெறும்; இந்த நடைமுறை நீண்ட காலமாக பின்பற்றப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை இளையராஜா கோவிலுக்கு வந்ததாகவும், அவருடன் பா.ஜ. கலாசாரப்பிரிவு மாநில செயலர் சசிகுமார் உள்ளிட்டோரும் வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் எஸ்.ஐ. ஒருவர் அவர்களை உள்ளே அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

மணி ஒலிக்கும் முன்பே இளையராஜாவை மூலஸ்தானத்துக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு சுமார் ஐந்து நிமிடங்கள் காத்திருந்த பின்னரே மணி ஒலித்ததாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். மணி ஒலித்த பிறகு அம்மனையும் சுவாமியையும் தரிசித்து அவர் புறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, கோவில் உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பக்தர்கள் புகார் அளித்து, விதிமுறைகள் தளர்த்தப்பட்டதா என கேள்வி எழுப்பியுள்ளனர்.