2024ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் 69 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அதிகாரிகளின் அலட்சியமே முக்கிய காரணம் என, ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் பகுதிகளில் கடந்த ஆண்டு ஜூன் 18, 19 தேதிகளில் நடந்த இந்த சம்பவத்தில் மொத்தம் 230 பேர் பாதிக்கப்பட்டதாகவும், இதில் 69 பேர் உயிரிழந்து 161 பேர் உடல்நல பாதிப்புக்கு உள்ளானதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்கள் மற்றும் மெத்தனால் வழங்கியவர்கள் உள்ளிட்ட 24 பேரை கைது செய்தனர். பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகளிடம் ஆணையம் விசாரணை நடத்தியது.

தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கையில், சம்பவம் தெரிய வந்த உடனேயே கள்ளச்சாராயம் புழங்கும் பகுதிகளில் அதிகாரிகள் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், 2023 விழுப்புரம் கள்ளச்சாராய துயர சம்பவத்திற்குப் பிறகு 2024 சம்பவம் வரை கள்ளச்சாராயத்தைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீது துறை சார்ந்த விசாரணை தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொழில்துறைக்குப் பயன்படுத்தப்படும் மெத்தனால் சட்டவிரோத கள்ளச்சாராய வியாபாரிகளிடம் செல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும், பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அறிக்கை பரிந்துரைத்துள்ளது.