அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்ததாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்தியாவில் செல்வாக்கு உள்ளவர்கள்மீது ஊழல் வழக்குகளை முன்னெடுக்கவே சிரமம் ஏற்படுகிறது என கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி இருந்தபோது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் சாலை பணிகளுக்கான டெண்டர்கள் அவரது உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களுக்கு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ரூ.98.25 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, லஞ்ச ஒழிப்பு துறைக்கு எதிராக அறப்போர் இயக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி, விஜய கார்த்திகேயன் ஆகியோர்மீது வழக்கு தொடர ஒப்புதல் வழங்குவதில் தாமதம் ஏன் என மத்திய அரசிடம் விளக்கம் கேட்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் வழக்கு மீண்டும் வந்தபோது, ஒப்புதல் கோரி தமிழக அரசு அனுப்பிய கடிதம் ஜூலை 28-ஆம் தேதி கிடைத்ததாகவும், அது பரிசீலனையில் இருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், ஆகஸ்ட் 27-ஆம் தேதி நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து, ஒப்புதல் வழங்குவதில் ஏன் தாமதம் என நீதிபதி கேள்வி எழுப்பி, ஒப்புதல் பெறவே இவ்வளவு வற்புறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், அடுத்தகட்டத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது எனக் கருத்து தெரிவித்தார். ஒப்புதல் கோரிய கடிதத்தின் தற்போதைய நிலை மற்றும் தாமதத்திற்கான காரணங்களை விளக்க, மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சி துறை சார்பு செயலர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக உத்தரவிட்டு, விசாரணையை வரும் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.