புதுடில்லி: இந்தியா–பிரான்ஸ் உறவு “புதிய உச்சத்தை” எட்டியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பாரிஸ் அருகே திறக்கப்பட்ட ‘பாப்ஸ் சுவாமிநாராயண் ஹிந்து மந்திர்’ கோவில், இரு நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட வாய்ப்புகளின் நீடித்த அடையாளம் என அவர் கூறினார்.

திறப்பு விழாவில் காணொலி வழியாக உரையாற்றிய மோடி, உலகின் பல பகுதிகளில் ‘பாப்ஸ்’ அமைப்பு நிறுவிய கோவில்கள் இந்தியாவின் தத்துவ மரபுகளையும் மனித மதிப்புகளையும் சர்வதேச சமூகங்களிடம் கொண்டு சேர்க்க உதவுகின்றன என்றார். பாரிஸ் கோவில் பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்கும் சின்னமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

கோவிலில் பயன்படுத்தப்பட்ட பல கற்கள் இந்தியாவில் செதுக்கப்பட்டதாகவும், இதன் மூலம் இந்தியாவின் பாரம்பரிய கைவினைத்திறன் பிரான்சின் நவீன பொறியியல் நுட்பத்துடன் இணைந்துள்ளதாகவும் மோடி கூறினார். இந்த கோவில் பக்தி மற்றும் சேவையை இணைக்கும் மையமாக செயல்படும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் இணைந்து இருதரப்பு உறவை மேம்படுத்தி வருவதாக கூறிய மோடி, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, ராணுவம், விண்வெளி, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் புதிய உத்வேகத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக தெரிவித்தார். 2026-ஐ இந்தியா–பிரான்ஸ் புத்தாக்க ஆண்டாக கொண்டாடுவதாகவும் கூறினார்.

மேலும், பிரான்சில் இந்திய வீரர்கள் செய்த தியாகம் மக்களின் நினைவில் நிலைத்திருப்பதாகவும், சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்துவதில் பிரெஞ்சு அறிஞர்கள் முக்கிய பங்கு வகித்ததாகவும் அவர் நினைவூட்டினார். ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீல பிரபுபாதர் உள்ளிட்டோருடன் தொடர்புடைய எழுத்துகள் மற்றும் பயணங்கள் ஆன்மிக உறவை வலுப்படுத்தியதாகவும், யோகா மக்கள் தொடர்புகளுக்கான பாலமாக மாறியுள்ளதாகவும் கூறினார். புதிதாக திறக்கப்பட்ட இந்த கோவில் பிரான்சுடனான இந்தியாவின் கலாசார உறவில் முக்கிய அத்தியாயம் எனவும் அவர் தெரிவித்தார்.