நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் இல்லங்கள் மற்றும் முதியோருக்கான மருத்துவ பராமரிப்பு வசதிகள் அமைப்பது தொடர்பாக, மாநில அரசுகள் புதுப்பித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் வழக்கறிஞர் அஸ்வனி குமார் 2016-ல் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரிக்கும் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மூத்த குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் நலன் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக மனுவில் கூறப்பட்டு, மாவட்ட அளவில் முதியோர் இல்லங்கள், ஓய்வூதியம் மற்றும் மருத்துவ வசதிகள் உறுதி செய்ய வேண்டும் என கோரப்பட்டது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு (நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி.மோகனா) இந்த வழக்கை விசாரித்தது. நேரில் ஆஜரான அஸ்வனி குமார், இந்த முக்கிய வழக்கு பல ஆண்டுகளாக முன்னேற்றமின்றி நிலுவையில் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
விசாரணையில், செயல்படுத்தலை உயர் நீதிமன்றங்கள் வழியாக முன்னெடுக்கலாம் என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டாலும், தற்போதைய கள நிலவரத்தை அறிய உச்சநீதிமன்றம் விருப்பம் தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி அனைத்து மாநிலங்களின் தலைமை அரசு வழக்கறிஞர்களுக்கு கடிதம் அனுப்ப வேண்டும் என்றும், மாநிலங்களில் உள்ள முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை மற்றும் அங்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள் குறித்த விவரங்களுடன் புதிய அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அட்டர்னி ஜெனரலின் கடிதம் கிடைத்த நான்கு வாரங்களுக்குள் அனைத்து மாநிலங்களும் இந்த புதுப்பித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் கூறியது. மேலும், முதியோர் நலத் திட்டங்களை சீராக செயல்படுத்த தேசிய சட்டப் பணிகள் ஆணையம் மற்றும் ‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ அமைப்பின் ஆலோசனைகளையும் பெற முன்பே அறிவுறுத்தியிருந்ததை நீதிமன்றம் நினைவூட்டியது.





